Thursday, July 18, 2013

குமரி கண்டம் வரலாறு


     
ஒரு காலத்தில் சுமார் கி.மு.5,00,000 ஆண்டுகளுக்கு முன்பு, ஆஸ்திரேலியாவில் தொடங்கி தென்னாப்பிரிக்காவையும் இந்தியாவையும் இணைத்துக் கொண்டு ஒரு நீண்ட நிலப்பரப்பு இருந்தது என்கிறார், அறிஞர் ஓல்டுகாம் அவர்கள். 
பேரறிஞர் எக்கேல் மற்றும் கிளேற்றர் இருவரும் ஒருமனதாக “சந்தாத் தீவுகளிலிருந்து” தொடங்கி ஆசியாவின் தென்கரை வழியாக ஆப்பிரிக்காவின் கீழைக்கரை வரை ஒரு பெரிய நிலப்பரப்பு பரவியிருந்த தாகவும், அங்கே குரங்கையொத்த உயிரினம் “இலமுரியா” (Lemuria) வாழ்ந்தன எனக் கூறுகின்றனர்.

பேரறிஞர் திரு. கட்டு எலியட் என்பவர் தாம் எழுதிய “மறைந்த இலமுரியா” (Lost Lemuria) என்ற நூலில் காட்டியுள்ள நில வரைபடத்தில் ஒரு பெரிய மலைத் தொடர் மேடைக்கடலில் தொடங்கித் தென் வடக்காகக் குமரிமுனை வரை சென்று பின்பு தென் மேற்காகத் திரும்பி மடகாசுக்கர் என்னும் ஆப்பிரிக்கத் தூவு வரை சென்றது எனச் சுட்டிக் காட்டுகிறார் என பேராசிரியர் திரு. கா. சுப்பிரமணியப்பிள்ளை அவர்கள் கூறுகின்றார்.

ஆஸ்திரேலியா, சாலித்தீவையும், தென்னாப்பிரிக்காவையும் தன்னுடன் இணைத்துக் கொண்டிருந்த நாடே “குமரி கண்டம்” என்கிறார் திரு. தேவநேயப்பாவாணர். இக்கண்டத்தில் தோன்றியவன் தான் “மாந்தன்” இவனை குமரிமாந்தன் என்பர். இவனுடைய நிலை மொழியற்ற ஊமையர் நிலை தோரா. கிமு.500000-100000 வரையாகும்.

குமரிமாந்தரின் மொழியற்ற நிலை
“சைகை மொழி” – Sign Language.

குமரி நாட்டு மாந்தன், முற்காலகட்டத்தில் ஆடையின்றி விலங்குகளைப் போல் தன் இச்சைகளைப் பெற்று வந்தான். மனவுறமுமின்றி, மொழியுணர்ச்சியுமின்றி, உணர்ச்சியொலிகளையும், விளியொலிகளையும் கையாளத் தொடங்கினான். காலப் போக்கில் தன் கருத்துக்களைச் சைகைகளாலேயே வெளிப்படுத்தி வந்தான். (Gesture Language or Sign Language) இதை ஊமையர் மொழி என்றே கூறலாம்.

இயற்கை மொழி தோரா. கி.மு.1,00,000 – 5,00,000
எழுத்தும், உச்சரிப்பும் சொற் பொருத்தமும் இல்லாமல் இயல்பாகப் பேசப்படும் ஒலித்தொகுதி (Natural Language) இயற்கை மொழியாம், இம்மொழியை “முழைத்தல் மொழி” (Gesture Language – or Sign Language) என்கிறோம். இம்மொழியின் ஒலிகள் 8 வகைப்படும். அவை

1. உணர்ச்சியொலிகள் (Emotional Sounds)
இன்ப துன்ப உணர்வை வெளியிடும் ஒலிகள்.

2. விளியொலிகள் (Vocative Sounds) பிறரை
விளித்தல், அழைத்தல், கூப்பிடிதல் போன்றவைகள்.

3. ஒப்பொலிகள் (Imitative Sounds)
இரு திணைப் பொருளுரைக்கும் ஒலிகள்.

4. குறிப்பொலிகள் (Symbolic Sounds) வழக்கப்படி
கருத்துக்களைத் தெரிவிக்கும் ஒலிகள்.

5. வாய்ச் செய்கையொலிகள்
வாயினாற் செய்யும் செய்கைகளும் செயல்களும்.

6. குழவி வளர்ப்பொலிகள் (Nursery Sounds)
குழந்தைப் பருவத்தினருக்குப் பொருந்தும் ஒலிகள்.

7. சுட்டொலிகள் (Decitive Sounds)
சுட்டிக் காட்டும் ஒலிகள் சுட்டொலிகள், மற்றும்.

8. வினாவொலிகள் என்பவைகளும் உண்டு,
அவை ஐயம், சந்தேகம் மற்றும் வினாக்களை
எழுப்பும் ஒலிகள் எனப்படும்.

தமிழ்மொழியின் முதல் தோற்றம் கி.மு.5,00,000
மூவகைச் சுட்டொலிகளிலிருந்து சொற்கள் தோன்றியதே தமிழ் மொழியின் முதல் தோற்றமாகும். இதைச் செயற்கை மொழி (Artificial Language or Artificial Speech) என்கிறோம். மொழித்துணையின்றி மூவகைச் சுட்டொலிச் சொற்களால் கருத்துக்களைப் பரிமாறும் ஊமையர் நிலையைக் கருத்தில் கொள்ளுங்கள்.

தமிழ் தோன்றிய இடம் குமரிக்கண்டம் அல்லது குமரிமாந்தனின் இலமுரியாக்கண்டம்
தமிழனின் பிறப்பிடமும் தமிழ் மொழியின் பிறப்பிடமும் குமரிக்கண்டம் தான். அக்கண்டம் நீரில் மூழ்கிப் போனது. முச்சங்க வரலாற்றாலும், சிலப்பதிகார உரைகள் மூலம் தெரியலாம். திரு. பி.டு. சீனிவாசய்யர், திரு சேசையர் திரு. இராமச்சந்திர தீட்சிதர் போன்றோரின் வரலாற்று நூல்கள் வாயிலாகவும், தேவநேயப் பாவாணர் எழுதிய “முதற்தாய் மொழி” வாயிலாகவும், நாம் நன்கறிகிறோம். தமிழன் தோன்றிய இடம் குமரிக்கண்டம், கையாண்ட மொழி தமிழ் திராவிட மொழியாகும். பல்லாயிரம் ஆண்டுகளுக்குப் பின் படிப்படியாக வளர்ந்த தமிழும், தமிழனும், புகழின் உச்சக்கட்டம் எட்டினர். பழந்தமிழ் நாட்டை உலகிற்குச் சுட்டிக் காட்டினர்.

குமரிக்கண்டமும் அதன் எல்லைகளும்

பழந்தமிழ் நாடாகிய குமரிக் கண்டம் அளவில் மிகப் பெரிதாக பரவியிருந்தது. ஆஸ்திரேலியாவையும் தென்னாப்பிரிக்காவையும் இந்தியாவையும் இணைத்துக் கொண்டிருந்த பெரும் நிலப்பரப்பே குமரிக் கண்டம் அல்லது பழந்தமிழ் நாடு அல்லது இலமூரியா கண்டம் என்கிறார் ஹிராடடஸ், இக்கருத்தை பேரறிஞர்கள் திலு.ஓல்டுகாம், திரு. எக்கேல், திரு. கிளேற்றர், திரு. கட்டு எலியட், திரு. தேவநேயப் பாவாணர் போன்றோர் ஏகமனதாக ஏற்றுக் கொண்டனர். மேலும் ஹிராடடஸ் அவர்கள் குமரிக் கண்டத்தின் எல்லையைக் குறிப்பிட்டுள்ளார்.

1. தொலைமேற்கில் – கிரேக்க நாடு
2. மேற்கில் – எகிப்து மற்றும் ஆப்பிரிக்கா
3. வடமேற்கில் – மென் ஆப்பிரிக்கா
4. தொலை கிழக்கில் – சீன நாடு
5. கிழக்கில் – பர்மா, மலேசியா, சிங்கப்பூர்
6. தெற்கில் – நீண்ட மலைத் தொடர்

இம்மலைத் தொடர் ஆஸ்திரேலியாவில் தொடங்கி தென்னாப்பிரிக்காவில் முடிவடைகிறது என்பதை மனதில் கொள்ள வேண்டும். இவற்றின் மையத்தில் அமைந்த மிகப் பெரிய கண்டமே குமரிக் கண்டம் அல்லது பழந்தமிழ் நாடு அல்லது இலமூரியா கண்டமாகும்.

இக்கண்டத்தை பதினான்கு மாநிலங்களாக அதாவது ஏழு தெங்கு நாடு, ஏழு பனை நாடு என பிரித்திருந்தனர். அந்நாட்டில் வாழ்ந்தவன் தான் தமிழன். அவன் கையாண்ட நாகரிகம்தான் திராவிட நாகரிகம். அவனுடைய வரலாறும் நாகரிகமும் தான் உலகிலேயே முதன்மை வாய்ந்தது. இவனுடைய மொழி தமிழ், தமிழர்கள் தமிழ்நாட்டிலிருந்து கடல் வழியாகவும், தரை மார்க்கமாகவும் உலகெங்கும் சென்று குடியேற்றங்களை அமைத்து தமிழ் மொழியையும், தமிழ்ப் பண்பாட்டையும், தமிழ்க் கலாச்சாரத்தையும் பாரெங்கும் பரப்பானர் என்பதே உண்மை. இதற்குச் சான்றாக பினீசியர்களின் நாணயங்களும், கல்வெட்டுக்களும் உதவுகின்றன.

குமரிக்கண்டப் பழங்குடிமக்கள் தமிழர்களே!
குமரிக்கண்டத்தின் பெரும் பகுதியாகிய பழந்தமிழ் நாட்டை ஆண்டவன் தமிழனே! அம்மொழியும் தமிழ் மொழியே! கடல் கோள்களால், தமிழனின் புகழும், நாடும், மொழியும் அழிவுற்றன. பழந்தமிழ் இலக்கியங்களில் கூறப்படும் கடல்கோள்கள் ஒன்றல்ல, இரண்டல்ல, பலப் பல. நான்கு முறை ஏற்பட்ட பெரும் கடல் கோள்கள் குமரிக் கண்டத்தை அழித்து நாசமாக்கியது.

நான்கு பெருங் கடல் கோள்கள்

1. முதல் சங்கம் – தென்மதுரை – கடல் கொண்டது
2. இரண்டாவது – நாகநன்னாடு – கடல் கொண்டது
3. மூன்றாவது இடைச்சங்கம் – கபாடபுரம் – கடல் கொண்டது
4. நான்காவது – காவிரிப்பூம்பட்டிணம் – கடல் கொண்டது.

சிறுகடல் கோள்கள் எண்ணில் அடங்காது


குமரிக்கண்டம் எனும் கண்டம் போன்ற பெரும் நிலப்பகுதியானது இன்றுள்ள இந்தியாவின் எல்லையான குமரி முனைக்குத் தெற்கே முற்காலத்தில் பாண்டியர்களின் ஆட்சிக்கு கீழ் அமைந்திருந்தது எனக் கருதுவதற்கு இடம் தரும் வகையில் பண்டைத் தமிழ் இலக்கிய நூற்களில் சில தகவல்கள் உண்டு. தேவநேயப் பாவாணர் முதலானோர் இந்த குமரிக்கண்டத்தில்தான் மாந்தர்களும் தமிழர்களும் முதன்முதல் தோன்றினர் என எழுதியுள்ளனர்[1] ஆதி மனிதன் தோன்றியிருக்கக் கூடிய தென் குமரிக்கண்டம் கடல்கோளால் (சுனாமி போன்ற ஆழிப்பேரலைகளால்) அழிவிற்குட்பட்டது என்பது சில தமிழறிஞர்களின், அறிவியல் முறைப்படி நிறுவப்படாத, கருத்து. பண்டைத்தமிழ் இலக்கிய நூல்களில் கிடைக்கப்பெறும் தகவல்களில் சிலவற்றைக் கீழே காணலாம்:
 

சிலப்பதிகாரத்தில் "பஃறுளியாறும்", "பன்மலை அடுக்கத்துக் குமரிக்கோடும்" "கொடுங்கடல் கொண்டது" பற்றிக் கூறுகின்றது.
 

அடியில் தன்னள வரசர்க் குணர்த்தி
வடிவே லெறிந்த வான்பகை பொறாது
பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக்
குமரிக் கோடுங் கொடுங்கடல் கொள்ள
வடதிசைக் கங்கையும் இமயமும் கொண்டு
தென்றிசை யாண்ட தென்னவன் வாழி (சிலப். 11:17-22)
பாண்டியனை வாழ்த்தும் பொழுது
"செந்நீர்ப் பசும்பொன் வயிரியர்க் கீத்த
முந்நீர் விழவின் நெடியோன்
நன்னீர்ப் பஃறுளி மணலினும் பலவே" (புறம் 9)
 

"தொடியோள் பௌவம்" என்னும் சிலப்பதிகாரத் தொடர்க்கு அடியார்க்கு நல்லார் என்னும் உரையாசிரியர் கொடுக்கும் விரிவான விளக்கத்தில் "தென்பாலி முகத்திற்கு வடவெல்லையாகிய பஃறுளி என்னும் ஆற்றிற்கும் குமரியென்னும் ஆற்றிற்கும் இடையே எழுநூற்றுக் காவத வாறும், இவற்றின் நீர்மலிவானென மலிந்த ஏழ்தெங்க நாடும், ஏழ்மதுரை நாடும், ஏழ்குணகாரை நாடும், ஏழ்பின்பாலை நாடும், ஏழ்குன்றநாடும், ஏழ்குணகாரை நாடும், ஏழ்குறும்பனை நாடும் என்னும் இந்த நாற்பத்தொன்பது நாடும் குமரி கொல்லம் முதலிய பன்மலைநாடும், காடும் நதியும் பதியும் தடநீர்க்குமரி வடபெருங்கோட்டின் காறும் கடல் கொண்டொழிதலாற் குமரியாகிய பௌவ மென்றா ரென்றுணர்க." [2]
 

இரண்டாம் சங்கம் இருந்த காலத்தில் கபாடபுரம் என்ற தலைநகரம் முழுகிய பின்னரும் குமரி ஆறு இருந்ததென்பதை தொல்காப்பிய சிறப்புப் பாயிர வரி, "வட வேங்கடந் தென்குமரி" குறிப்பதாகக் கருதுகின்றனர்.
தெனாஅ துருகெழு குமரியின் தெற்கும்"
"குமரியம் பெருங்துறை யயிரை மாந்தி" (புறம் 6:67)
"மலிதிரை யூர்ந்துதன் மண்கடல் வௌவலின்
மெலிவின்றி மேற்சென்று மேவார்நா டிடம்பட" (கலித். 104)
என்னும் குறிப்பு, பழம் பாண்டிய நாட்டை கடல்கொண்டதை குறிக்கின்றது என்பர்.
 

இறையனார் அகப்பொருள் உரையில் விரிவாக ஆண்ட அரசர்களின் வரிசை, தமிழ் அவையில் இருந்த புலவர்களின் வரிசை முதலியன குறிக்கப்பெற்றுள்ளன. இது போல செய்திகள் தமிழ் இலக்கியத்தில் வேறு எங்கும் இல்லை.

இத்தென்குமரிக்கண்டத்தின் தலைநகராக தென்மதுரை விளங்கியதாகவும் மேலும் தென்மதுரையில் தலைச்சங்கம் இருந்ததென்பதும், அதனை அடுத்து மேலும் இரண்டு சங்கங்கள் இருந்தனவென்பதும் நூற்களின் தகவல்களாகும். மேலும் முதற் கடற்கோளால் குமரிக்கண்டம் என்று கூறப்படும் நிலப்பகுதி அழிவுற்றது என நூற்தகவல்கள் குறிக்கின்றன. இவ்வாறு மொத்தம் நான்கு கடல்கோள்கள் நிகழ்ந்ததாகக் கருதுகின்றனர். கிடைக்கப்பெற்ற நூற்தகவல்களின் மூலம் உறுதியாகக் கூறமுடியாத அளவிற்குக் குமரிக்கண்டம் வெறும் கற்பனைக் கண்டமென்பது பலருடைய கருத்து. இக்குறிப்புகளில் உள்ள உண்மை இன்னும் அறிவியல் முறைப்படி நிறுவப்படவோ, மறுக்கப்படவோ இல்லை. இறையனார் அகப்பொருள் உரையில் கூறியுள்ளது உண்மையாக இருப்பின் தமிழர்களின் இலக்கிய காலம் சுமார் கி.மு 10,500 ஆண்டுகள் வரை செல்லும். இதற்கு வலுவான பிற உறுதிகோள்கள் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை.

No comments: